நினைவு இல்லமாக மாறுமா போயஸ் கார்டன்

Print lankayarl.com in இந்தியா

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்


சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 44 ஆண்டுகளாக வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மறைவைத் தொடர்ந்து, இரண்டு தளங்கள் கொண்ட வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

20 கோடி ரூபா ஒதுக்கீடு - இதை அடுத்து, வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி அறிவித்தார்.

தொடர்ந்து, சென்னை மாவட்ட வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தை அளவிடும் பணிகளில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக 2018-19-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு 20 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எதிர்ப்பு - நினைவு இல்லம் தொடர்பாக சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தலைமையில் போயஸ்கார்டன் பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், ஜெயலலிதா வசித்தபோது, எங்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். அவரது வீட்டை நினைவு இல்லமாக மாற்றினால், நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், போயஸ் கார்டன் பகுதியில் சாலைகள் சிறிய அளவிலேயே உள்ளதால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால், ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொது இடத்தில் அமைக்கலாம் என்றனர்.